நெல்லையப்பர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
By DIN | Published On : 05th May 2019 01:11 AM | Last Updated : 05th May 2019 01:11 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயில் மூர்த்தி சிவாச்சாரியர் மற்றும் சிவாச்சாரியர்கள் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் செய்தனர். நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணி வரை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில், சுவாமி நெல்லையப்பர், நெல்லை கோவிந்தர், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் ஆகியோருக்கு சிறப்பான முறையில் கும்பம் வைத்து மழை வேண்டி வருண காயத்ரி ஜபம் நடைபெற்றது. பிறகு, மஹா சங்கல்பம், விநாயகர் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம் பூஜை, மந்திர ஹோமம், ருத்ர பாராயணம் நடத்தப்பட்டது. மூலமந்திரத்தால் ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமிக்கு அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்றது.
பிறகு, வருண பகவானின் அருள்கிடைக்க வேண்டி பொற்றாமரை குளத்தில் அபிஷேகங்கள் நடைபெற்றன. விவசாயம் செழிக்க வேண்டி இந்த பூஜை நடைபெற்றது. பிரதோஷ நந்தியை சுற்றி நீர்த்தொட்டி கட்டி, நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் ப. ரோஷினி செய்திருந்தார்.