நெல்லை நகரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி: மே 7 முதல் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 05th May 2019 03:11 AM | Last Updated : 05th May 2019 03:11 AM | அ+அ அ- |

நெல்லை நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் முதல் அருணகிரி திரையரங்கு வரையிலான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறவுள்ளதால், வரும் 7-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நகர கோட்ட நிர்வாக பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு தாமிரவருணி ஆற்றின் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நீர்த்தேக்க பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு பேட்டை காமராஜர் பள்ளி மாநகராட்சி வளாக பகுதியில் சுத்திகரிப்பு செய்து திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகள் முழுமைக்கும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபத்திலிருந்து அருணகிரி தியேட்டர் வரை 600 மி.மீ. விட்டமுள்ள இரண்டு இரும்பு குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. அதற்கான பணிகள் வரும் 7-ஆம் தேதி முதல் தொடங்குவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
அந்த வழியாக வரக்கூடிய பேருந்துகள், வாகனங்கள், பேட்டை - சேரன்மகாதேவி - முக்கூடல் - கடையம் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நெல்லையப்பர் கோயில் சன்னதி - சந்திபிள்ளையார் கோயில் -காட்சிமண்டபம் வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் வண்ணார்பேட்டை -தச்சநல்லூர் - ராமையன்பட்டி - கண்டியப்பேரி - பழையபேட்டை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.