வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
By DIN | Published On : 05th May 2019 01:11 AM | Last Updated : 05th May 2019 01:11 AM | அ+அ அ- |

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல காட்சி மகிமைத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணிய ஸ்தலங்களில் சிறப்பு பெற்ற இத் திருத்தலத் திருவிழாவை முன்னிட்டு, புனித பாத்திமா அன்னை திருவுருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அருள்தந்தை ஜெபநாதன், பணகுடி பங்குத்தந்தை சுரேஸ், தெற்குகள்ளிகுளம் பனிமாதா மெட்ரிக் பள்ளித் தாளாளர் வின்சென்ட் ஆகியோர் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
விழாவில் அருள்தந்தையர் ஜெரால்டு ரவி மற்றும் குருவானவர்கள், அருள்சகோதரிகள், வள்ளியூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறுகிறது.
மே 12ஆம் தேதி 9ஆம் திருவிழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு அன்னையின் திருஉருவப் பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. 13ஆம் தேதி 10ஆம் திருவிழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு விடுமுறை விவிலிய பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை பங்குத் தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், அருள்தந்தை சகாய ஜஸ்டின் மற்றும் அருள்சகோதரிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.