அரசுப் பள்ளிகளை பாதுகாக்க மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
By DIN | Published On : 05th May 2019 03:08 AM | Last Updated : 05th May 2019 03:08 AM | அ+அ அ- |

ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை நிறைவேற்றிவரும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க பொதுமக்கள் முன்வரவேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாசுதேவநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட வாசுதேவநல்லூர், நெல்கட்டும்செவல், தென்மலை, முள்ளிக்குளம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் கிராமப்புற மக்களின் கல்விக்கனவை நிறைவேற்றிவரும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் வெளியான அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளில் மேற்படி 4 அரசுப் பள்ளிகள் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்துள்ளன.
இது, சம்பந்தப்பட்ட கிராம மக்களை மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தியிருப்பதோடு, அரசியல் கட்சியினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் இரா. நடராஜன் கூறியது: வாசுதேவநல்லூர், நெல்கட்டும்செவல், தென்மலை, முள்ளிக்குளம் பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையிலிருந்து கல்வியைப் பாதுகாக்க பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆர்வமுடன் சேர்க்க முன்வரவேண்டும். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.