உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகள்: ஆட்சேபணைகளை தெரிவிக்க காலஅவகாசம்
By DIN | Published On : 05th May 2019 03:07 AM | Last Updated : 05th May 2019 03:07 AM | அ+அ அ- |

உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் தொடர்பாக அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆட்சேபணைகளை தெரிவிக்க மே 14-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட்டு வார்டுகளுக்கு ஏற்ப 2019-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள விவரம் மாவட்ட தேர்தல் அலுவலரால் கடந்த 22-ஆம் தேதி ஒப்புதல் வழங்கப்பட்டு 23-ஆம் தேதி விளம்பரம் செய்யப்பட்டது.
அறிவிப்பு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக பொதுமக்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கூட்டம் கடந்த 30-ஆம்தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து தங்களது கருத்துகளையும், மறுப்புரைகளையும் தெரிவிக்க 15 நாள்கள் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர்.
அதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில், வரைவு வாக்குச்சாவடி பட்டியலின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள், ஆட்சேபணைகளைப் பெற்று, மே 14-ஆம் தேதி நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலை வெளியிடவும், அவ்வாறு வெளியிடப்பட்ட நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்களை 16-ஆம்தேதி அச்சிட்டு முடிவறிக்கையை அனுப்புமாறும் தெரிவித்துள்ளது.
எனவே உள்ளாட்சித் தேர்தலுக்காக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி பட்டியல் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களின் கருத்துகள், ஆட்சேபணைகளை சம்பந்தப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆணையர்கள், செயல் அலுவலர்கள்) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்ளாட்சித் தேர்தல் பிரிவில் 14-ஆம் தேதிக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...