கோடையில் நாய்களை தாக்கும் வெப்ப அயற்சி: பாதுகாப்பது எப்படி?
By ஏ.வி.பெருமாள் | Published On : 05th May 2019 01:10 AM | Last Updated : 05th May 2019 01:10 AM | அ+அ அ- |

கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், வெளிநாட்டின நாய்கள் வெப்ப அயற்சியால் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
செல்லப் பிராணிகளில் குறிப்பாக நாய்களை வளர்ப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம். சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை போன்ற மண் சார்ந்த பாரம்பரிய நாட்டு நாய்களை சிலர் வளர்க்கிறார்கள். இந்த நாய்களுக்கு மழை, வெயிலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை என்றே சொல்லலாம். ஆனால் செல்வந்தர்களின் வீட்டில் வளர்க்கப்படும் நீள முடிகளை உடைய லாஸா அப்úஸா, கோலீ, ஜெர்மன் ஷெப்பர்டு, ஸ்பிட்ஸ், கிரேட் டேன், லேப்ரடார், ராட்வில்லர், டாபர்மேன், பொமேரியன், குட்டையான மூக்கை உடைய பாக்ஸர், பக், புல் டாக் போன்ற வெளிநாட்டின நாய்கள் கோடையில் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் வெப்ப அயற்சியால் பாதிக்கப்படுகின்றன. இதில் சில உயிரிழக்கவும் செய்கின்றன.
தமிழகம் முழுவதும் தற்போது கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில், வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அறிகுறிகள்: வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட நாய்கள் மூச்சுவிட முடியாமல் தவிக்கும். மூச்சிறைப்பு ஏற்படும். நாக்கு சிவந்து காணப்படும். வாய் உலர்ந்து கடுமையான தாகம் ஏற்படும். நடக்க முடியாமலும், பலவீனமாகவும் இருக்கும். வாந்தி ஏற்படும். மூக்கில் இருந்து ரத்தம் ஒழுகும். வலிப்பு ஏற்படும். 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக நாய்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் நாய்கள் உயிரிழக்க நேரிடும்.
பாதுகாப்பது எப்படி? வெப்ப அயற்சியில் இருந்து நாய்களை பாதுகாப்பது குறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது: நமது மண் சார்ந்த நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை போன்றவை வெயிலை தாங்கும் சக்தி படைத்தவை. அதுபோன்ற நாய்களுக்கு வெப்ப அயற்சி ஏற்படுவது மிகவும் அரிது. ஆனால் வெளிநாட்டின நாய்களை கோடைகாலத்தில் குளிர்ச்சியான இடங்களில் வைத்தாலொழிய வெப்ப அயற்சியில் இருந்து காப்பாற்ற முடியாது. எனவே கோடைகாலத்தில் நாய்களுக்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். பகல் நேரங்களில் நிழலான பகுதி அல்லது குளிர்ச்சியான பகுதியில் கட்டி வைக்க வேண்டும். தினந்தோறும் சுமார் 20 நிமிடங்கள் நீரில் விளையாட விட வேண்டும். பருத்தி துணியில் ஆன விரிப்பை நாய் படுக்கும் இடத்தில் விரிக்க வேண்டும். நாய்களுக்கு சத்தான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை அளிக்க வேண்டும்.
அறைகளில் கட்டி வைக்கப்படும் நாய்களுக்கு மின் விசிறி, ஏர் கூலர், ஏர் கண்டிஷனர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். வெப்ப அயற்சிக்கான அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
செய்யக் கூடாதது என்ன? கோடைகாலத்தில் வெப்ப அயற்சி ஏற்படாமல் இருக்க, நாய்களுக்கு அதிக உடற்பயிற்சி அளிக்கக் கூடாது. காலை மற்றும் முன்னிரவு வேளைகளில் எளிய உடற்பயிற்சிகளை அளிக்கலாம். வெயில் நேரத்தில் நாய்களை வெளியிலோ அல்லது வெயில் படும் தரைகளிலோ சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது.
மூச்சிறைப்பு ஏற்படுகிறபோது நாய்களுக்கு வாய்க்கூடு போடக் கூடாது. முற்றிலும் மூடப்பட்ட கார் பார்க்கிங் பகுதிகளில் நாய்களை கட்டி வைக்கக் கூடாது. இதேபோல் ஏர் கண்டிஷனர் வசதியில்லாத கார்களில் நாய்களை கொண்டு செல்லக் கூடாது.
நாய்களுக்கு அதிகளவில் முடி இருந்தால், அதை வெட்டிவிட வேண்டும். இதன் மூலம் வெப்ப அயற்சியில் இருந்து நாய்களை பாதுகாக்க முடியும் என்றார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...