களக்காடு - நான்குனேரி சாலையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 09:17 AM | Last Updated : 15th May 2019 09:17 AM | அ+அ அ- |

களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் வடக்கு விஜயநாராயணம் கிராமத்துக்கு குடிநீர் கொண்டுசெல்லும் நீரேற்று நிலையம் உள்ளது. இப் பகுதியில் சாலைத் திருப்பம் உள்ளது. இச்சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் ஜெ.ஜெ.நகர் சாலைத் திருப்பம் உள்ளது. இந்த இரு சாலைத் திருப்பங்களும் அபாயகரமான வளைவுப் பகுதியாகும். ஜெ.ஜெ.நகர் வளைவுப் பகுதியில் சில மாதங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியிலும் விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை அமைக்கவும், இந்த இரு இடங்களிலும் தகுந்த எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.