பாளை.யில் போலி லாட்டரி சீட்டு விற்றதாக 3 பேர் கைது
By DIN | Published On : 15th May 2019 09:14 AM | Last Updated : 15th May 2019 09:14 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட லாட்டரிச் சீட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், திருநெல்வேலி பகுதியில் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் திருநெல்வேலி நகர உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சங்கரபாணி (51), சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் நாகராஜ் (51), பாளையங்கோட்டை சித்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் வடிவேல் (52) ஆகிய 3 பேரும் போலி லாட்டரி சீட்டுகளை விற்றனராம். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த ரூ.1 லட்சத்து 63ஆயிரத்து 960 ரொக்கம் மற்றும் போலி லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய 14 புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.