ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th May 2019 07:59 AM | Last Updated : 19th May 2019 07:59 AM | அ+அ அ- |

ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் செ.பால்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலுக்காக மாவட்டம் முழுவதும் பல்வேறு வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இருந்து இன்னமும் கூட ஒப்புதலுக்காக முன்னுரிமைப் பட்டியல் அனுப்பப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை சனிக்கிழமை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, முன்னுரிமை பட்டியலில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சரியான முறையில் பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் முன்னுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கடந்த மாதமே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மேற்கண்ட விஷயங்களை வலியுறுத்தியுள்ளார் என முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.
எனவே, அனைத்து வட்டார ஆசிரியர்களும் உடனடியாக அந்தந்த வட்டார கல்வி அலுவலகம் சென்று முன்னுரிமை பட்டியலை கடந்த ஆண்டு பட்டியலோடு ஒப்பிட்டு பார்ப்பதுடன், ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து உரிய ஆதாரங்களுடன் வட்டார
கல்வி அலுவலரிடம் கொடுப்பதோடு, முன்நகலாக மாவட்ட கல்வி அலுவலருக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் ஒரு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.