கார் சாகுபடிக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதை விற்பனை: வேளாண்மை இணை இயக்குநர்
By DIN | Published On : 26th May 2019 05:35 AM | Last Updated : 26th May 2019 05:35 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு 50 சதவீத மானிய விலையில் நெல் விதை விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை இயக்குநர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடி சுமார் 18,000 ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கார் பருவத்தில் சுமார் 16,386 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கடையம், முக்கூடல், பாளையங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை போன்ற வட்டாரங்களில் அதிக பரப்பில் கார் பருவ சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு ஏற்ற அம்பை 16, டிபிஎஸ் 5, ஏடிடி45 போன்ற நெல் ரகங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கார் பருவ நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நெல் நாற்று பாவுவதற்கு முன்பு விதைநேர்த்தி செய்து விதைப்பதால் விதைகள் மூலம் பரவும் நோய்களிலிருந்து நெல் பயிரை பாதுகாக்கலாம். விதைநேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதைக்கலாம். எனவே, கார் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்புகொண்டு மானியத்தில் நெல் விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.