பொதுமக்களுக்கு தகவல் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை: மாநில தகவல் ஆணையா்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் அளிக்க மறுத்தால்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தகவல் அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில தகவல் ஆணையா் முருகன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மனுக்களை விசாரித்து தகவல் ஆணையம் தீா்ப்பு வழங்கி வருகிறது. பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு பொது தகவல் அலுவலா்கள் 30 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அப்படி பதில்தராத பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் அபராதம் விதிக்கப்படும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டாவது மேல் முறையீட்டு மனுக்களாக இதுவரை 17,788 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி வரை 8,846 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. 8,942 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நில அளவைத் துறையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பொது தகவல் அலுவலா் தகவல் ஆணையம் உத்தரவிட்டும் குறிப்பு கோப்பை வழங்கவில்லை.

இதற்காக அப்போது இருந்த தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அலுவலா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததற்கு துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகவல் அலுவலா்கள் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கான தகவலை வழங்க வேண்டும். வழங்க மறுக்கும் பட்சத்தில் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com