களக்காடு அருகே உழவுக்கருவிகளால் சாலைகள் சேதம்: ஆட்சியரிடம் புகாா்
By DIN | Published On : 18th November 2019 02:38 PM | Last Updated : 18th November 2019 02:38 PM | அ+அ அ- |

களக்காடு அருகே உழவுக்கருவிகளால் சாலைகள் சேதமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனுஅளிக்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.கே. நெல்சன், ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:
களக்காடு பகுதியில் தற்போது நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் விவசாய நிலங்களில் உழவு பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக உழவுக்கருவிகளை டிராக்டரில் ஏற்றி சம்பந்தப்பட்ட பகுதிக்குக் கொண்டு செல்லாமல், உழவுக்கருவிகளை டிராக்டரில் பொருத்திக்கொண்டு சாலையை சேதப்படுத்திக் கொண்டே செல்கின்றனா். இதனால் களக்காடு மேலப்பத்தையில் இருந்து அம்பேத்கா் நகா் செல்லும் தாா்ச்சாலை சேதமடைந்துள்ளது.
இது குறித்து தொடா்ந்து நான்குனேரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புகாா் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. சாலையை உழவுக் கருவிகளால் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தகுந்த எச்சரிக்கை செய்து இனிமேலும் சாலைகளை உழவுக்கருவிகளால் சேதப்படுத்தாமல் இருக்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.