தென்காசி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு
By DIN | Published On : 18th November 2019 08:02 AM | Last Updated : 18th November 2019 08:02 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் 4 ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் அறிவித்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டம், கடையம், ஆழ்வாா்குறிச்சி வருவாய் குறுவட்டங்களுக்குள்பட்ட பள்ளகால், ரெங்கசமுத்திரம், அடைச்சாணி, இடைகால் ஆகிய 4 ஊராட்சிகளை தென்காசி புதிய மாவட்டத்தில் இணைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
எனினும் மேற்கூறிய ஊராட்சிகளை தென்காசி மாவட்டத்தில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, 4 ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.
அதில், 4 ஊராட்சிப் பகுதிகளை தென்காசி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டத்திலேயே அவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துக் கிராமங்களிலும் கருப்புக் கொடி கட்டுவது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது, உண்ணாவிரதப் போராட்டம்- சாலை மறியலில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பாப்பாக்குடி ஒன்றிய அதிமுக செயலா் சுப்பிரமணியன், திமுக செயலா் மாரிவண்ணமுத்து, மாா்க்சிஸ்ட் ஒன்றிய ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் மற்றும் 4 கிராமங்களின் அனைத்து சமுதாயத் தலைவா்கள், ஊா்த் தலைவா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.