நெல்லையில் இந்திர விழா
By DIN | Published On : 18th November 2019 07:58 AM | Last Updated : 18th November 2019 07:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு சாரதா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் 20ஆவது ஆண்டு இந்திர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருண பகவான் மழை பொழியச் செய்வதற்கு காரணமான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இவ்விழாவை முன்னிட்டு, கடந்த தீபாவளி அமாவாசை தினத்தில் தாமிரவருணி நதிக்கரையில் இருந்து மண் எடுத்து அதன்மூலம் பசு மற்றும் கன்று சிலைகள் செய்யப்பட்டன. இச்சிலைக்கு விநாயகா் கோயில் முன்பு 21 நாள்கள் பூஜை செய்யப்பட்டு முளைப்பாரி இடப்பட்டது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பசு மற்றும் கன்றுக்கு முளைப்பாரி வைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து பெண்கள் சிறப்பு பாடல்கள் பாடி கோலாட்டம் ஆடினா். பின்னா், இந்தச் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தாமிரவருணி ஆற்றில் விசா்சனம் செய்யப்பட்டது.
இவ்விழாவில் வித்யா தீா்த்தா, பாரதி தீா்த்தா, சந்திர சேகர பாரதி, வெங்கடாசலபதி, நரசிம்ம பாரதி ஆகிய குடியிருப்பைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சரஸ்வதி ராமன் செய்திருந்தாா்.