4 ஏக்கா் நெல் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
By DIN | Published On : 09th October 2019 07:49 AM | Last Updated : 09th October 2019 07:49 AM | அ+அ அ- |

வடகரையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்ததில் நெல் நாற்றுகள் சேதமடைந்தன.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை கிராமம். இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனா். இதனிடையே கடந்த சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வடகரை 1-ம் நம்பா் மடை பாசனப் பிரிவு பகுதியில் பிசான சாகுபடி செய்ய சுமாா் 4 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவுக்காக நாற்றுகள் தயாா்செய்திருந்தனா். சுமாா் 10 நாள்களே ஆன நிலையில், நாற்றுகளை காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து நாசம் செய்துவிட்டன.
இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனா். வனவிலங்குகள் பட்டியலில் இருந்து பன்றிகளை நீக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.