நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காலாண்டு விடுமுறை பயிற்சி வகுப்புகள்
By DIN | Published On : 22nd September 2019 04:38 AM | Last Updated : 22nd September 2019 04:38 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறையையொட்டி, பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வரும் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. 24 ஆம் தேதி- வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் பயிற்சி நடைபெறுகிறது. மாணவ- மாணவிகள் வரைபடத் தாள், வரைவதற்கு தேவையான பொருள்களுடன் பங்கேற்கலாம்.
25, 26 ஆம் தேதிகளில் கலைப்பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் வண்ணத் தாள் கொண்டு அழகிய பொம்மை தயாரித்தல், சிறிய அளவிலான செயற்கை வீணை தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 27, 28 ஆம் தேதிகளில் கண்ணாடி ஓவியப் பயிற்சி நடைபெறுகிறது. 30 ஆம் தேதி உல்லன் நூல் கொண்டு அழகிய நாய்க்குட்டி பொம்மை தயாரிக்கும் பயிற்சியும், அக்டோபர் 1 ஆம் தேதி ஓவியப் போட்டியும் நடைபெறுகிறது.
அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, சிறப்பு ஓவியக் கண்காட்சி மற்றும் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 0462- 2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.