களக்காடு அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 29th September 2019 03:21 AM | Last Updated : 29th September 2019 03:21 AM | அ+அ அ- |

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் இ. நம்பிராஜன், கிராம மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கோவிலம்மாள்புரம் ஊராட்சியில் 15 கிராமங்களும், அருகேயுள்ள கடம்போடுவாழ்வு, வடுகச்சிமதில் ஆகிய ஊராட்சிப் பகுதியில் 25-க்கும் அதிகமான குக்கிராமங்களும் உள்ளன. இந்த 3 ஊராட்சியிலும் சுமார் 2 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் துணை சுகாதார நிலையமோ, ஆரம்ப சுகாதார நிலையமோ இல்லை.
வடுகச்சிமதில், கடம்போடுவாழ்வு பகுதி மக்கள் அரசு இலவச மருத்துவ சேவையைப் பெற சுமார் 5 முதல் 8 கி.மீ. தொலைவில் படலையார்குளம் ஜெ.ஜெ. நகரில் உள்ள பிரிடா மோனியர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அங்கு சென்றுவர போதிய பேருந்து வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராம மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதையே தவிர்த்துவிடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு வடுகச்சிமதில், கடம்போடுவாழ்வு, கோவிலம்மாள்புரம் ஆகிய ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் 3 ஊராட்சிகளுக்கும் மையப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.