காங்கிரஸுக்கு ஆதரவாக20 நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம்: முகமது அபூபக்கர் எம்.எல்.ஏ.
By DIN | Published On : 29th September 2019 03:19 AM | Last Updated : 29th September 2019 03:19 AM | அ+அ அ- |

நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக எங்களது கட்சியில் இருந்து 20 நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்வார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. முகமது அபூபக்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றிக்காக பிரசாரம் செய்யவுள்ளோம்.
அந்தத் தொகுதியில் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிக அளவில் உள்ளது. அந்த வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தருவோம்.
இதற்காக அங்குள்ள ஜமாத் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடைச்சட்டம், என்.ஐ.ஏ. விசாரணை போன்ற சிறுபான்மை விரோத போக்குகளை எடுத்துக்கூறி காங்கிரஸுக்காக வாக்குகள் சேகரிப்போம். எங்களது தேசியத்தலைவர் காதர் மொஹிதீன், பொருளாளர் ஷாஜகான், எம்.பி. நவாஸ்கனி, முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான் போன்ற 20 நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.
தற்போது மாவட்டத் தலைவர் மீரான் மைதீன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.
அப்போது, மாநில துணைத்தலைவர் கோதர் மைதீன், மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், ஏர்வாடி முகமது ஷாபி, மேலப்பாளையம் முகைதீன் அப்துல்காதர், இளைஞரணி மண்டல ஒருங்கிணைப்பாளர் நயினா முகமது கடாபி ஆகியோர் உடனிருந்தனர்.