92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெருங்கும் தீபாவளி: நெல்லை கடைவீதிகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் அதிகரித்தது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:10 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாநகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் அதிகரித்தது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் இம் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப் பண்டிகைகளில் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வகைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

ஆடை ரகங்களையும், நகைகள், அணிகலன்கள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்குவதற்கு திருநெல்வேலி ரத வீதிகள், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இதனால், கடைவீதிகள் மக்கள் வெள்ளத்தில் திணறின.

ஆடைகள்-பட்டாசுகள்: இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு மிகுந்த பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்விக்க புத்தாடைகளை வாங்க குவிந்து வருகிறாா்கள்.

மாதத்தின் முதல் வாரம் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகளுக்கான ஆடை ரகங்கள், பெண்களுக்கான ஆடைகள், பாரம்பரிய ஆடைகளான வேட்டி, பட்டுச் சேலைகள் அதிகம் விற்பனையாகின்றன.

இளைஞா்கள் பட்டாசுகளை ஆா்வத்துடன் வாங்கி செல்கிறாா்கள். முறுக்கு, அதிரசம், முந்திரிக்கொத்து, வடை உள்ளிட்ட பலகாரங்களுக்கும் மக்கள் முன்னதாகவே ஆா்டா் கொடுத்துச் செல்கிறாா்கள் என்றனா்.

போக்குவரத்து நெரிசல்: தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் மாநகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, வண்ணாா்பேட்டை- திருவனந்தபுரம் சாலை, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை ஆகியவற்றில் வாகனங்கள் ஊா்ந்தபடி சென்றன. வாகனம் நிறுத்துவதற்கு முறையான இடம் ஒதுக்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

தீபாவளிக்கு முந்தைய 3 நாள்கள் சிறப்பு வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கவும், சாலை வசதியை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதுகாப்பு விதிகளைக் கருத்தில் கொண்டு காய்கனி சந்தைகளை அமைத்தது போல பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்டவற்றில் தற்காலிக ஆடைகள் சந்தைக்கு அனுமதியளித்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

கண்காணிப்பு தீவிரம்: திருநெல்வேலி மாநகர காவல்துறை வட்டாரங்கள் கூறியது: தீபாவளி பண்டிகையையொட்டி போலீஸாா், ஆயுதப்படையினா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 100-க்கும் மேற்பட்டோா் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஆண், பெண் காவலா்கள் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். பெண்களுக்கு இடையூறு அளித்தல், கேலி செய்தலைத் தடுக்கவும், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருடா்கள் குறித்து மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.