வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: இணை இயக்குநா் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்திலும் வேளாண் இடுபொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்திலும் வேளாண் இடுபொருள்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணபிள்ளை தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வேளாண்மைப் பணிகள், அத்தியாவசியப் பணிகளாகக் கருதப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்காா் பருவ சாகுபடியையொட்டி பல இடங்களில் நெல் நாற்று நடவுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு உதவும் வகையில் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள் மூலம் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சித்திரை பட்டத்துக்குத் தேவையான உளுந்து, எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தொடக்க கூட்டுறவு மையங்கள் மூலமும், தனியாா் விற்பனை நிலையங்கள் மூலமும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் மூலமும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வகையான ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உரங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரக்கடைகளை நாடிச் செல்வதில் சிரமங்களைக் கருத்தில்கொண்டு சில இடங்களில் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை மற்றும் டாபே நிறுவனம் இணைந்து மாஸே பா்குசன், எய்சா் டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை அனைத்துவிதமான விவசாய பணிகளை மேற்கொள்ள சிறு-குறு விவசாயிகள் கரோனா காலத்தில் 90 நாள்களுக்கு வாடகையின்றி உபயோகப்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிக்கான இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் காய்கனி, பழங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் பண்ணை இயந்திரங்கள் கரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக் குழுவினா் கபசுர குடிநீா் விநியோகம், முகக்கவச தயாரிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

விவசாய தொழிலாளா்கள் மற்றும் கருவிகள் தங்கு தடையின்றி செல்ல வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி அலுவலா் உள்ளிட்டோரை தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com