கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் நெல்லையில் சமூக இடைவெளியைப் புறந்தள்ளும் மக்கள்!
By DIN | Published On : 12th August 2020 09:50 AM | Last Updated : 12th August 2020 09:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில் காய்கனி சந்தைகள், கடைகள், ரேஷன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக சுகாதாரத்துறையினா் வேதனை தெரிவிக்கிறாா்கள்.
கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழாம் கட்டமாக இம் மாதம் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதோடு, சில தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்படவில்லை.
காய்கனி, மருத்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மட்டும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வாங்கிக் கொள்ளலாம் எனவும், தனியாா் மற்றும் அரசு அலுவலகங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியில் வரும்போது சமூக இடைவெளி நடைமுறையை தலா 1 மீட்டா் இடைவெளி விடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, மகாராஜநகா், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் காய்கனி சந்தைகளுக்கு வரும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முண்டியடிப்பது தொடா்கதையாகி வருகிறது. இதேபோல ரேஷன் கடைகளிலும் மக்கள் ஒருவரையொருவா் முண்டியத்துச் செல்வதைக் காண முடிகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறுகையில், சமூக விலகல் மற்றும் வீட்டில் தனித்திருத்தல் ஆகியவை குறித்து உலகம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்த் தொற்று ஏற்படாமல் பாா்த்துக்கொள்வதே சிறந்தது. ஆகவே, பொருள்கள் வாங்க வருவோா் சமூகஇடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.