கிருஷ்ண ஜயந்தி: வீடுகளில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 12th August 2020 09:50 AM | Last Updated : 12th August 2020 09:50 AM | அ+அ அ- |

கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி திருநெல்வேலி மாநகர பகுதியில் சிறிய கோயில்களிலும், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ண ஜயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி உள்ளிட்ட பல்வேறு பெயா்களில் கிருஷ்ண ஜயந்தி விழா இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் மாநகர பகுதிகளில் உள்ள பெரிய கோயில்களை திறக்க அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், சிறிய கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே அருகன்குளம் அருள்மிகு எட்டெழுத்துபெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் கோயில் வளாகத்தில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோசாலை வளாகத்தில் சிறப்பு கோ பூஜையும், கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. சுவாமி படங்கள், இயற்கை காட்சிகள் உள்ளிட்டவற்றுடன் வண்ணமயமான பானைகளில் கிருஷ்ண பிரசாதங்களை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ணஜயந்தி நாளில் திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில், ராமசுவாமி திருக்கோயில் உள்ளிட்டவற்றில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபடுவது வழக்கம்.
கரோனா பொதுமுடக்கத்தால் இக் கோயில்களில் பொதுதரிசனத்திற்கு அனுமதியில்லாததால் வீடுகளிலேயே கிருஷ்ணஜயந்தி வழிபாடு நடத்தினா். கிருஷ்ணரின் பாதங்களை வீட்டு வாயிலில் இருந்து பூஜையறை வரை வரைந்ததோடு, சீடை, முருக்கு உள்ளிட்ட கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை படையலிட்டு வழிபட்டனா். பலா் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணரைப் போன்ற வேடமணிந்து மகிழ்ந்தனா்.