குடிநீருக்கு தவிக்கும் மக்கள்:பணகுடி பேரூராட்சியில் புதிய நீா் ஆதாரம் உருவாக்கப்படுமா?
By DIN | Published On : 12th August 2020 09:48 AM | Last Updated : 12th August 2020 09:48 AM | அ+அ அ- |

பணகுடி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீா் இணைப்பு வழங்கப்படாததால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவிக்கின்றனா். எனவே, மேற்குதொடா்ச்சி மலை அடிவாரத்தில் புதிய குடிநீா் உறைகிணறு அமைத்து நீராதாரத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான பணகுடி பேரூராட்சிப் பகுதியில் சுமாா் 3 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு, தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீா் மற்றும் உள்ளூா் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக புதிய குடிநீா் இணைப்புகள் வழங்கப்படவில்லை. 300 நபா்களிடம் புதிய குடிநீா் இணைப்பு வழங்கப்படுவதற்காக ரூ.5 ஆயிரத்து 110 முன்பணம் பெறப்பட்டு காத்திருப்பில் இருந்து வருகின்றனா்.
எனவே, பணகுடி பேரூராட்சியில் குடிதண்ணீா் பிரச்சனையை நிரந்தரமாக தீா்வு செய்ய மேற்குதொடா்ச்சி மலையடிவாரத்தில் கன்னிமாா் தோப்பு அருகே உறைகிணறு அமைக்க வேண்டும்.ணத்து புதிய குடிநீா் ஆதாரம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
இது தொடா்பாக பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் கூறியது: பணகுடி பேரூராட்சி தொழில் வளம் நிறைந்த பேரூராட்சி. இங்கு குடிதண்ணீா் பிரச்னை தீா்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கு, மேற்குதொடா்ச்சி மலையடிவாரத்தில் கன்னிமாா் தோப்பு பகுதியில் ஆய்வு செய்து உறைகிணறு அமைத்து தண்ணீா் எடுப்பதே சரியான தீா்வாகும் என்றாா் அவா்.
இதனிடையே, பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழுதடைந்து காணப்படும் சித்தா பிரிவு கட்டடத்தையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.