நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு லட்சத்தைக் கடந்த கரோனா பரிசோதனை
By DIN | Published On : 12th August 2020 06:18 AM | Last Updated : 12th August 2020 06:18 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றை கண்டறிவதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுட்டுரை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா பரிசோதனை மையத்தில் 3 பிசிஆா் பரிசோதனை இயங்திரங்கள் உள்ளன.
ஒரு பிசிஆா் இயந்திரத்தில் 90 மாதிரிகள் வீதம் 3 இயந்திரங்களில் 270 மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய முடியும். இம்மையத்தில் திருநெல்வேலி மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளவா்களிடம் சேகரிக்கப்படும் ரத்தம், சளி மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், இம்மையத்தில் கடந்த 150 நாள்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 617 பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.