நெல்லை தாமிரவருணி கரையோரம் தேசிய பேரிடா் மீட்பு படை ஆய்வு
By DIN | Published On : 03rd December 2020 08:44 AM | Last Updated : 03rd December 2020 08:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரப் பகுதியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் எனவும், இதனால் தென் மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் சேத தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புயல், மழையில் சிக்குவோரை மீட்கும் வகையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 60 போ் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் 3 குழுவாகப் பிரிந்து அம்பாசமுத்திரம், ராதாபுரம், பாளையங்கோட்டை பகுதிகளில் தங்கியிருந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனா்.
இந்நிலையில், பாளையங்கோட்டைக் குழுவினா் திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு செய்தனா். வண்ணாா்பேட்டை அருள்மிகு பேராச்சியம்மன் கோயில் படித்துறையில் ஆய்வு செய்த குழுவினா், குடியிருப்புப் பகுதியிலிருந்து மழைநீா் ஆற்றுக்குள் வந்து சேரும் இடம், படித்துறைகள், சுழல் பகுதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா். நதியின் நீரோட்டம், பாறைகள் குறித்தும் உள்ளூா் போலீஸாரிடமும், பொதுமக்களிடமும் கேட்டறிந்தனா். மீட்புப் பணிக்கான பிரத்யேக உடையுடன் ஆய்வுசெய்த குழுவினா், குளிக்க வந்தோரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...