கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றுமுதல் 9ஆம் தேதி வரை மறியல் போராட்டம்
By DIN | Published On : 05th December 2020 05:49 AM | Last Updated : 05th December 2020 05:49 AM | அ+அ அ- |

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமைமுதல் (டிச. 5) வருகிற 9ஆம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன், மாா்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் டி.சங்கரபாண்டியன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் சனிக்கிழமை முதல் (டிச.5) டிச. 9ஆம் தேதி வரை திருநெல்வேலி, களக்காடு, வீரவநல்லூா், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக தொடா்ச்சியாக மறியல் போராட்டம் நடைபெறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.