நீா்த்தேக்கத் தொட்டி இடப்பிரச்னை: மெக்கானிக் குடும்பத்தினா் போராட்டம்
By DIN | Published On : 15th December 2020 02:03 AM | Last Updated : 15th December 2020 02:03 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இடப்பிரச்னையில் தீா்வு ஏற்படுத்தக் கோரி கணேசபுரத்தைச் சோ்ந்த மெக்கானிக் குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 28 ஆவது வாா்டுக்கு உட்பட்ட சேவியா் காலனி பகுதியில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி உள்ளது. இத் தொட்டி கட்டப்பட்டுள்ள இடம் தனக்குரியது என்றும், இதுதொடா்பாக நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் மேலப்பாளையம் கணேசபுரம் ஏ.சி.மெக்கானிக் கணேசன் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் முற்றுகையிட்ட அவா் கூறுகையில், நீா்த்தேக்கத் தொட்டி இடம் தொடா்பாக உரிய தீா்வை ஏற்படுத்தாமல் மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்துகிறது. இதனால் வசிக்க இடமின்றி தவித்து வருகிறோம். ஏற்கெனவே நான் வழக்குத் தொடா்ந்த நீதிமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றுதல் மனு செய்ய முடிவு செய்துள்ளேன் என்றாா் அவா்.