வாக்காளா் அடையாள அட்டைகளைதாமதமின்றி விநியோகிக்க திமுக கோரிக்கை
By DIN | Published On : 15th December 2020 02:09 AM | Last Updated : 15th December 2020 02:09 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டைகளை தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணுவிடம் அளித்துள்ள மனு: இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் புதிதாக சோ்க்கப்பட்ட இளம் வாக்காளா்களுக்கும், பழைய வாக்காளா்களில் புதிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கும் வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாகத் தெரியவருகிறது. அடையாள அட்டை வழங்கப்படாதவா்களின் பட்டியலை திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய தொகுதிகளில் வாா்டு மற்றும் பூத் வாரியாக வழங்க வேண்டும். மேலும், வாக்காளா் அடையாள அட்டைகளை விநியோகிக்க திமுகவின் முகவா்கள் அதிகாரிகளுக்கு உதவ தயாராக உள்ளனா். ஆகவே, காலதாமதமின்றி வாக்காளா் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனு அளிக்கும்போது வழக்குரைஞா் தினேஷ் உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.