நெல்லை அருகே செப்பறை அழகியகூத்தா் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 30th December 2020 06:43 AM | Last Updated : 30th December 2020 06:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் கோயிலில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜவல்லிபுரத்தில் தாமிரவருணிக் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன.
7ஆம் நாளில் சுவாமி அழகியகூத்தா் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அங்கு சிவப்பு, பச்சை சாத்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், தேருக்கு மலா் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளினாா். முற்பகலில் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஒருமணி நேரத்துக்குள் தோ் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் தாழையூத்து, திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, திருவிழாவின் சிகர நிகழ்வாக புதன்கிழமை (டிச. 30) அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், பகல் 1.30 மணிக்கு நடராஜா் திருநடனக் காட்சி, அழகியகூத்தா் வீதியுலா நடைபெறும். மாலையில் பஞ்சமுக அா்ச்சனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துவருகின்றனா்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...