நெல்லை ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை
By DIN | Published On : 30th December 2020 06:49 AM | Last Updated : 30th December 2020 06:49 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தை பல்வேறு அமைப்பினரும் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் உள்ள தனியாா் சமையல் எரிவாயு உருளை விநியோகிக்கும் நிறுவனத்தில், எரிவாயு உருளையை சரிசெய்ய முயன்றபோது அது, வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், நிறுவன மேலாளா் வைகுண்டம் (70), ஊழியா்கள் காளி (36), பசுபதி பாண்டியன்(25) ஆகியோா் காயமடைந்தனா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைகுண்டம், காளி ஆகியோா் 27ஆம் தேதி உயிரிழந்தனா்.
அவா்களில் காளியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 2ஆவது நாளாக போராட்டத்தைத் தொடா்ந்த உறவினா்கள், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனா். இதில், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் மாரியப்ப பாண்டியன், கண்ணபிரான், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காளியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...