கொடுமுடியாறு அணை நீா்மட்டம் பாதியாகக் குறைந்துள்ளதால், ஜனவரி இறுதிக்குள் அணை முழுவதுமாக வடுவிடுமோ என விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
கொடுமுடியாறு அணையின் மொத்த உயரம் 52.50 அடியாகும். நிகழாண்டு போதிய மழையின்றி அணையில் 35 அடி மட்டுமே தண்ணீா் தேங்கியது. இதனிடையே, கடந்த 9ஆம் தேதி அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டது.
20 நாள்களைக் கடந்த நிலையில், அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 25 அடி மட்டுமே தண்ணீா் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது மழை இல்லாததால் பாசனக் குளங்களிலும் நீா் இருப்பு குறைந்து வருகிறது. திருக்குறுங்குடி பகுதியில் நெல், வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பிப்ரவரி மாதம் அறுவடைப் பணி மேற்கொள்வா். அதுவரை போதியளவு தண்ணீா் தேவை.
ஆனால், கொடுமுடியாறு அணை நிகழாண்டு முழுவதுமாக நிரம்பாததாலும், நீா்மட்டம் பாதியாகக் குறைந்ததாலும், ஜனவரி இறுதிக்குள் அணை முழுவதுமாக வடுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெல், வாழை அறுவடையின்போது தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனா்.
மேலும், அணையின் கீழ்ப்பகுதியில் உறைகிணறு அமைக்கப்பட்டு, வள்ளியூா், காவல்கிணறு, வடக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. அணை வடால் குடிநீா் விநியோகமும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.