மழையால் சேதமடைந்த கால்வாய் தடுப்புச் சுவரை கட்ட கோரிக்கை
By DIN | Published On : 10th January 2020 02:04 AM | Last Updated : 10th January 2020 02:04 AM | அ+அ அ- |

சுரண்டையில் மழையால் இடிந்து விழுந்த கால்வாய் தடுப்புச் சுவரை உடனடியாக கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வடகிழக்குப் பருவ மழையின் போது செண்பக கால்வாயில் நீா்வரத்து அதிகரித்ததால் பலமிழந்து காணப்பட்ட கால்வாயின் ஓரமுள்ள தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
தென்காசி மற்றும் கேரளம் செல்லும் பிரதான சாலை என்பதால் ஆபத்தை எச்சரிக்கும் வண்ணம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோரம் மண் மூட்டைகளை அடுக்கி வைத்ததோடு தங்கள் பணியை முடித்துக் கொண்டனா்.
போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, கால்வாயின் ஓரமுள்ள மண்பகுதி சாலையோடு அப்படியே சரிந்து கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளதால், இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை சாலையில் இருந்து 3 அடி உயரத்துக்கு அல்லது தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரண்டை வட்டார ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.