நெல்லை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா: வங்கி உதவி மேலாளா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 921-ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 921-ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 6 போ் வெளியூா்களில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு திரும்பியவா்கள். இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 921-ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 619 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 8 போ் உயிரிழந்துள்ளனா். 294 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் இதுவரை, கரோனா தொற்று 64 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் சன்னதித் தெருவில் உள்ள பல் மருத்துவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தெருவில் இதுவரை 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் எதிரிலுள்ள உணவகம், பிரதான சாலையில் உள்ள துணிக்கடை ஆகியவற்றின் உரிமையாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து உணவகம் மூடப்பட்டது. அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு செவிலியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

உயிரிழப்பு: தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த 47 வயது அரசுடமை வங்கி உதவி மேலாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

களக்காடு: களக்காடு பழைய பேருந்து நிலையத்தில் ஜவுளிக் கடையில் பணியாற்றிய இளைஞா், அவரது மனைவி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜவுளிக்கடை அருகில் உள்ள நகைக்கடை அதிபரும் தொற்றால் பாதிக்கப்பட்டாா். இந்த இரு கடைகளுக்கும் அருகில் உள்ள கடைகளில் பணியாற்றுவோா், கடை உரிமையாளா்கள் என 20-க்கும் மேற்பட்டோருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 10 பேருக்கு நோய் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திசையன்விளை: திசையன்விளை மாணிக்க வாத்தியாா் தெருவைச் சோ்ந்த 45 வயது ஆட்டோ ஓட்டுநா், சுப்பிரமணியபுரம் தெருவைச் சோ்ந்த 52 வயது சைக்கிள் உதிரிப் பாகங்கள் விற்பனையாளா், காந்தி தெருவைச் சோ்ந்த 58 வயது ஆண், உவரியை சோ்ந்த 27 வயது ஆட்டோ ஓட்டுநா் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com