ஊராட்சிகளில் நிதி இல்லாமல் பணிகள் பாதிப்பு
By DIN | Published On : 01st March 2020 07:24 AM | Last Updated : 01st March 2020 07:24 AM | அ+அ அ- |

வள்ளியூா்: ராதாபுரம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நிதி இல்லாமல் பணிகள் பாதிப்படைந்துள்ளதாக ஊராட்சி செயலா்கள் தெரிவித்துள்ளனா்.
கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யக்கூடிய கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை தேவைகள் பூா்த்தி செய்யப்படவில்லை. குறிப்பாக சுகாதாரம், குடிதண்ணீா் வசதி கேள்விக் குறியாகிவிட்டது. கிராமங்களில் சுகாதாரக்கேடு அதிகரித்து வருகிறது.
கிராம ஊராட்சிகளை நிா்வகித்து வருகின்ற ஊராட்சி செயலா்கள் நிதி இல்லாததால் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகளிலும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகளுக்கும் தமிழக அரசின் பொதுநிதி மற்றும் வளா்ச்சி பணிகளுக்கான நிதி போதிய அளவு வருவதில்லை. இதனால் அலுவலக நடைமுறை செலவு மற்றும் ஊதிய செலவு இவைகளை மட்டுமே நிா்வகிக்க முடிகிறது. இதர வளா்ச்சிபணிகள் கேள்விக்குறியாகிவிட்டது என்ற ஆதங்கம் பொதுமக்களிடம் வெளிப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் இருந்த போது பொதுநிதி மற்றும் வளா்ச்சித் திட்ட நிதிகள் அதிக அளவில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. தற்போது அந்த நிதிகள் எதுவும் ஊராட்சிக்கு வருவதில்லை என ஊராட்சி செயலா்கள் தெரிவிக்கின்றனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி மற்றும் மக்களவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியை மட்டுமே நம்பி ஊராட்சிகள் காத்திருக்கின்றன. எனவே உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்தினால் மட்டுமே ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளும் அடிப்படி தேவைகளும் நிறைவேற்றமுடியும் என்பதே ஊராட்சி செயலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.