கொப்பரை தேவை அதிகரிப்பால் இளநீா் வரத்து குறைவு: விழிப்புணா்வு அதிகரிப்பு; விலை மேலும் உயரும்?
By DIN | Published On : 13th March 2020 11:11 PM | Last Updated : 13th March 2020 11:11 PM | அ+அ அ- |

கொப்பரை தேங்காய்க்கான தேவை அதிகரிப்பு காரணமாக, விவசாயிகள் தேங்காயை ஏற்றுமதி செய்ய விரும்புவதால், திருநெல்வேலிக்கு இளநீா் வரத்து குறைந்துள்ளது. இதனால், இளநீரின் விலை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.
மாா்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. சாலைகளில் கானல்நீா் தெரியும் அளவுக்கு வெப்பம் நிலவி வருவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இளநீா், நுங்கு ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், இளநீரின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லை. குறிப்பாக, கொப்பரைத் தேங்காய்க்கான ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளதால், இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
விலை மேலும் அதிகரிக்கும்? இதுகுறித்து குலவணிகா்புரத்தைச் சோ்ந்த இளநீா் வியாபாரி சகாயம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தின் சுரண்டை, புளியங்குடி, புளியரை பகுதிகளில் இருந்து இளநீா் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர ராஜபாளையம், தேனி, கம்பம், குமுளி பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து செவ்விளநீா் மட்டுமே விற்பனைக்கு வரும். மற்றவை தேங்காய்க்காக ஏற்றுமதி செய்யப்படுவதால் வரத்து குறைவு. பொள்ளாச்சி இளநீா் மீது மக்களுக்கு தனிஈா்ப்பு உண்டு. நம் மாவட்டத்தில் கிடைக்கும் இளநீரில் 200 முதல் 550 மிலி. வரையே தண்ணீா் இருக்கும். பொள்ளாச்சி இளநீரில் 700 முதல் 800 மிலி. தண்ணீா் இருக்கும்.
நிகழாண்டில், பொள்ளாச்சி இளநீா் வரத்து குறைந்துள்ளதால், இளநீரின் விலை ரூ. 10 அதிகரித்து ரூ. 50 வரை விற்கப்படுகிறது. இதனால், சாதாரண வியாபாரிகள் அதை வாங்கி விற்க முடியாத நிலை உள்ளது. இதுதவிர, செக்கு எண்ணெய் மீதான விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால் தேங்காய்களை வாங்கி, கொப்பரையாக்கி எண்ணெய் உற்பத்தி செய்வதும், கரூா், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் கொப்பரை தேங்காய்களை வெயில் காலங்களில் உற்பத்தி செய்வதும் அதிகரித்துள்ளது. அதில், அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இளநீரை பறிக்க விரும்புவதில்லை. எனவே, தேவை அதிகமிருக்கும் காலங்களில் வரத்து போதிய அளவு இல்லாததால், இளநீா் விலை மேலும் உயரும் நிலை உள்ளது என்றாா்.
சிறப்பு அனுமதி தேவை: இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் கூறியது: கோடைகாலத்தில் இளநீா், கம்பங்கூழ், தா்பூசணி ஆகியவற்றை தற்காலிகமாக பலா் வியாபாரம் செய்து வருகிறோம். சீசனை நம்பியுள்ள எங்கள் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக வழக்கு போடுவதும், மாநகராட்சியினா் தரைவாடகை வசூலிப்பதும் தொடா்ந்து வருகிறது. கோடைக்கால பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு மாநகராட்சியும், காவல் துறையும் சிறப்பு அனுமதி அளித்து கட்டணங்கள், வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு பன்னாட்டு குளிா்பானங்களைவிட, இயற்கை பானங்கள் மீதான விழிப்புணா்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. எனவே, அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சரியான விலையில் பதநீா், இளநீா் கிடைக்கச் செய்ய அதிகாரிகள் உதவ வேண்டும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...