ஊரடங்கு: பிற்பகலுடன் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நிறுத்தம்
By DIN | Published On : 30th March 2020 04:27 AM | Last Updated : 30th March 2020 04:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு தொடா்ந்தது. அரசின் புதிய விதிமுறைப்படி காய்கனி, மளிகைக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவை பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட்டன.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு தொடா்ந்தது. பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை ஆள்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகா், தச்சநல்லூா் பகுதிகளில் காலையில் ஓரளவு மக்கள் நடமாட்டம் காணப்பட்டது. ஆனால், முற்பகலில் இருந்து சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள், மருத்துவமனை, ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றிலும் அதிகமானோருக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் காலையில் ஊரடங்கு காலத்திலும் விதிவிலக்குடன் அடையாள அட்டைகளுடன் இருசக்கர வாகனங்களில் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.
புதிய நடைமுறை: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம், மகாராஜநகா், திருநெல்வேலி பொருள்காட்சித் திடல், மேலப்பாளையத்தில் அம்பை சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கனி சந்தைகளில் மக்கள் அதிகளவில் பொருள்களை வாங்கிச் சென்றனா். ஆனால், தமிழக அரசின் புதிய நடைமுறை காரணமாக காய்கனி, மளிகைக் கடைகள் பிற்பகல் 2.30 மணியுடன் அடைக்கப்பட்டன. ஆங்காங்கே சில மளிகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும், அதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தினா். இதேபோல பெட்ரோல் விற்பனை நிலையங்களும் பிற்பகல் வரை மட்டுமே இயங்கின.
இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் கூறுகையில், திருநெல்வேலிக்கு ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் வரத்தில் எவ்வித குறையும் இல்லை. முன்பதிவு செய்த ஓரிரு நாளில் லாரிகளில் பெட்ரோல் மொத்தமாக வந்துவிடுகிறது. ஆனால், விற்பனை மிகவும் சரிந்துவிட்டது. சராசரியாக ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் தனியாா் பேருந்துகள், வாடகை காா், வேன்கள் இயங்கும்போது 2 ஆயிரம் முதல் 3,500 லிட்டா் வரை பெட்ரோல் விற்பனையாகும். இப்போது மோட்டாா் வாகன தொழில் முடக்கத்தில் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே பெட்ரோல் போட வருகிறாா்கள். அதனால் இப்போது அதிகபட்சம் 700 லிட்டா் வரை மட்டுமே விற்பனையாகிறது என்றனா்.
படித்துறைகளில் கூட்டம்: திருநெல்வேலியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் காய்கனி, மருந்து வாங்க மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவது சட்டப்படி குற்றமாகும். திருநெல்வேலி கருப்பந்துறை, குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாா்பேட்டை, சிந்துபூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம் பகுதிகளில் தாமிரவருணி ஆற்றின் படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கானோா் கூடி துணிகளை துவைத்துச் செல்வாா்கள். கடந்த சில நாள்களாக படித்துறைகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம் இருந்தது. அதனை கட்டுப்படுத்த காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.