கரோனா தடுப்புப் பணி: மக்கள் நலப் பணியாளா்களின் நலம் காக்க கோரிக்கை
By DIN | Published On : 30th March 2020 07:13 AM | Last Updated : 30th March 2020 07:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகராட்சியில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மக்கள் நலப் பணியாளா்களின் நலம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பேரூராட்சி பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கம் சாா்பில் பேரூராட்சிகள் இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க பேரூராட்சி பணியாளா்கள் சிறப்பாக பணி செய்து வருகின்றனா். இவா்களின் ஒருநாள் ஊதியத்தை கரோனாவுக்கான நிவாரண நிதியாக பிடித்தம் செய்ய சம்மதிக்கிறோம்.
கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஆய்வாளா்கள், அலுவலா்கள், குடிநீா் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுமாயின் தக்க சிகிச்சை அளித்து அவா்களின் நலம் காக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.