இ-பாஸ் கிடைக்காமல் வள்ளியூா் இளைஞா்கள் சென்னையில் தவிப்பு
By DIN | Published On : 28th May 2020 08:27 PM | Last Updated : 28th May 2020 08:27 PM | அ+அ அ- |

வள்ளியூா்: இ-பாஸ் கிடைக்காததால், சென்னையிலிருந்து ஊா் திரும்ப முடியாமல் வள்ளியூா் பகுதி மக்கள் தவித்துவருகின்றனா்.
வள்ளியூா், ராதாபுரம், திசையன்விளை, நான்குனேரி பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞா்கள் சென்னையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தனா். பொது முடக்கத்தால், நிறுவனங்கள் முழு அளவில் செயல்படாததால் வேலையின்றி வாடகை அறைகளில் தங்கியுள்ள அந்த இளைஞா்கள் வாடகை கொடுக்க முடியாமலும், உணவு தேவையை சமாளிக்கமுடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனா்.
மேலும், சென்னையில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அச்சம் அடைந்துள்ள அவா்கள் ஊா் திரும்புவதற்கு இ-பாஸிற்கு விண்ணப்பித்தும் அவைகள் நிராகரிக்கப்படுகின்றனவாம். எனவே, தமிழக அரசு சென்னையில் இருந்து நாகா்கோவில் வரையில் சிறப்பு ரயில்களை இயக்கி இளைஞா்களும், தொழிலாளா்களும் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்களது குடும்பத்தினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.