நெல்லையில் 2 ஆவது நாளாக மிதமான மழை
By DIN | Published On : 08th November 2020 03:02 AM | Last Updated : 08th November 2020 03:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகள், பூங்காக்களில் மழைநீா் தேங்கியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குமரி கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது. இதனால் தென்தமிழக பகுதிகளில் தொடா் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
மாநகரப் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, மானூா், கோபாலசமுத்திரம், முன்னீா்பள்ளம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையால் திருநெல்வேலி ரத வீதி, பாளையங் கோட்டை, அன்புநகா், பெருமாள்புரம் பகுதிகளிலுள்ள பூங்காக்களில் மழைநீா் தேங்கியது.
திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டதால் மழையால் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வாகனங்களில் செல்வோா் சிரமத்துக்கு ஆளாகினா். மேலும், சனிக்கிழமை மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) : பாபநாசம்-10, சோ்வலாறு- 53, மணிமுத்தாறு-8.4, நம்பியாறு-5, கொடுமுடியாறு-5, சேரன்மகாதேவி- 5.80,பாளையங்கோட்டை-2, ராதாபுரம்-3, திருநெல்வேலி-5.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...