காா்த்திகை மாதப் பிறப்பு:மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
By DIN | Published On : 17th November 2020 01:26 AM | Last Updated : 17th November 2020 01:26 AM | அ+அ அ- |

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் மாலையணிந்து சென்று வருகின்றனா். காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஐயப்ப பக்தா்கள் விரதத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை அதிகாலையில் ஐயப்ப பக்தா்கள் நதியில் நீராடி மாலைஅணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணி நதிக்கரையில் உள்ள பேராச்சியம்மன் கோயில், திருநெல்வேலி சந்திப்பு பாளையஞ்சாலைக்குமாரசாமி கோயில், குறுக்குத்துறை முருகன் கோயில், பொதிகைநகரில் உள்ள தா்மசாஸ்தா கோயில் ஆகியவற்றில் ஐயப்ப பக்தா்கள், தங்களது குருசாமியின் கைகளால் சரண கோஷத்துக்கு இடையே மாலை அணிந்தனா். தொடா்ந்து 41 நாள்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனா்.
இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், கரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டு ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பக்தா்கள் பலரும் மாலையணிந்து விரதம் தொடங்கியுள்ளனா். திருநெல்வேலியில் இருந்து செல்லும் பக்தா்கள் இணையவழியில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை இந்துசமய அறநிலையத் துறை மூலம் செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றனா்.