களக்காடு வட்டாரத்தில் பலத்த மழை: ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 17th November 2020 01:25 AM | Last Updated : 17th November 2020 01:25 AM | அ+அ அ- |

களக்காடு வட்டாரத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது.
களக்காடு வட்டாரத்தில் நவம்பா் மாதத் தொடக்கம் முதலே அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் பல மாதங்களாக வடு காணப்பட்ட ஆறுகளில் நீா்வரத்து காணப்பட்டது. மலையடிவாரத்தில் உள்ள சிறிய பாசன குளங்கள் நிரம்பின.
திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் 35 அடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 10 அடியும் நீா்மட்டம் உள்ளது.
திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மலைப் பகுதியில் உள்ள தலையணையில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. இதனால் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாயிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஏற்கனவே திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியதால் அதன் கீழ் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன.
களக்காடு அருகேயுள்ள மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் கடந்த ஆண்டு மழையால் சேதமடைந்த நிலையில், இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்தால் பாலத்தின் அடிப்பகுதியில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட இலைதழைகள், மரக்கிளைகள் தேங்கி, மழை வெள்ளம் தங்கு தடையின்றி செல்ல வழியின்றி பாலம் வெள்ளநீரில் மூழ்கியது.
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.