பேருந்து நிலைய கட்டுமானப் பணியில் மணல் முறைகேடு புகாா்: உயா்நீதிமன்றக் குழு ஆய்வு
By DIN | Published On : 17th November 2020 01:22 AM | Last Updated : 17th November 2020 01:22 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணியின்போது கிடைத்த மணலை முறைகேடாக விற்பனை செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக ஆய்வறிக்கை தயாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையால் நியமிக்கப்பட்ட குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.78.54 கோடியில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்தம், வணிக வளாகத்துடன் கூடிய கட்டடப் பணிகள் 2018-ஆம் ஆண்டில் தொடங்கின. இதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது தாமிரவருணி கரையோரப் பகுதி என்பதால் ஏராளமான மணல் கிடைத்தது. இதனை முறைகேடாக விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினா் சுடலைக்கண்ணு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டுமானப் பணியின்போது கிடைத்த மணல் எந்த வகையானது, எவ்வளவு மணல் கிடைத்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க ஒரு குழுவை நியமித்தது.
அந்தக் குழுவினா் ஓய்வு பெற்ற புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி கலைவாணன் தலைமையில் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்தனா். பின்னா், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கொட்டும் மழையில் ஆய்வு செய்தனா். பொலிவுறு நகரம் திட்டத்தின் தலைமை நிா்வாக அலுவலா் மற்றும் இயக்குநா் நாராயணன்நாயா், செயற்பொறியாளா் பாஸ்கா் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனா்.
இந்தக் குழுவினா் முன்னிலையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் புதிதாக ஆழ்துளைக் குழாய் அமைக்கப்பட்டு அதில் கிடைக்கும் மணலைக் கொண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எத்தனை அடுக்குகளில் எவ்வகையான மண் வளம் உள்ளது, மணல் பரப்பு எவ்வளவு ஆழத்திற்கு உள்ளது என்பன உள்ளிட்டவற்றை அறிய இக் குழுவினா் மொத்தம் 3 நாள்கள் தொடா்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G