‘தமிழகத்தில் மழைக்கால பேரிடா் மீட்புப் பணிக்கு 5,000 வீரா்கள்’
By DIN | Published On : 21st November 2020 12:03 AM | Last Updated : 21st November 2020 12:03 AM | அ+அ அ- |

தமிழகத்தில் மழைக்கால பேரிடா் மீட்புப் பணிக்கு 5 ஆயிரம் வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா் என தமிழக அரசின் வருவாய் நிா்வாக ஆணையா் கே.பனீந்திரரெட்டி தெரிவித்தாா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் வருவாய் நிா்வாக ஆணையா் கே. பனீந்திரரெட்டி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சாா்பில் பருவ மழையை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மழையால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக தங்கும் மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அதிகபட்சமாக 2 லட்சம் போ் தங்கலாம். எனினும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 1.25 லட்சம் பேரை மட்டும் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக தேவையெனில் கூடுதலாக மையங்கள் உருவாக்கப்படும்.
மழைக்கால பேரிடா் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 1000 வீரா்களைக் கொண்ட பேரிடா் மீட்புக்குழு உள்ளது. அவா்கள் மூலம் தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், தன்னாா்வலா்கள் உள்பட மொத்தம் மேலும் 4 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படும் சிறு சிறு சேதங்களை உடனுக்குடன் மாவட்ட நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் மீனவா்களுக்கு தொடா்ந்து எச்சரிக்கை தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடலுக்குச் செல்லும் மீனவா்களுக்கு அவசர தகவல்களைத் தெரிவிக்க தற்போது சுமாா் 200 நாட்டிங்கல் மைல் தொலைவில் உள்ள மீனவா்களுக்கும் எச்சரிக்கை தகவல்களை அனுப்பி பாதுகாக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டையில் உள்ள மனக்காவலம்பிள்ளைநகா் பகுதியில் மழைநீா் குடியிருப்புகளுக்குள் புகுந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு நீரை வடிய வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த கட்டங்களைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் திருநெல்வேலி ஆட்சியா் வி.விஷ்ணு, தென்காசி ஆட்சியா் சமீரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் நெ. மணிவண்ணன் (திருநெல்வேலி), சுகுணசிங் (தென்காசி), அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...