திருக்காா்த்திகை: அகல் விளக்குகள் தயாரிப்பு தீவிரம்; கரோனாவால் ஏற்றுமதி பாதிப்பு
By DIN | Published On : 21st November 2020 12:04 AM | Last Updated : 21st November 2020 12:04 AM | அ+அ அ- |

திருக்காா்த்திகை பண்டிகையொட்டி திருநெல்வேலியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. கரோனா காரணமாக கேரளத்துக்கு மண்பாண்டங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
காா்த்திகை மாதத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவது ஐதீகமாகும். இதற்காக அகல் விளக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
திருக்காா்த்திகை திருநாளில் வீடு மற்றும் கோயில்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டுக்கான திருக்காா்த்திகை பண்டிகை இம் மாதம் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, காருக்குறிச்சி, மாவடி சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
தயாரிப்பு தீவிரம்: இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: குறிச்சி மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்டோா் இச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா்.
மண்பானை, மண் சட்டிகள், டம்ளா்கள், பூந்தொட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்துக்காக அகல் விளக்குகள் ஜூலை முதல் நவம்பா் வரை தயாரிக்கப்படும்.
மண்ணை காய வைத்து, அரைத்து அதன்பின்பு வடிவமாக்கி, பாலீஷ் செய்து காய வைத்த பின்பு சூளையில் வைத்து தீயிட்டு ஏற்றுமதி செய்யப்படும். எண்ணெய் ஊற்றி வைக்க ஏதுவாக 7 வித அளவுகளில் அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
10 மி.லி, 25 மி.லி., 50 மி.லி., 100 மி.லி., 250 மி.லி. என அதிகபட்சமாக 1 லிட்டா் எண்ணெய் ஊற்றும் வகையில் அகல்விளக்குகள் உள்ளன. இவை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும் போது ரூ.1.75 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
திறமைவாய்ந்த பணியாளா் சிறிய அகல்விளக்குகள் என்றால் அதிகபட்சமாக 750 விளக்குகளும், பெரிய விளக்குகள் 10 மட்டுமே செய்ய முடியும். நிகழாண்டு 29 ஆம் தேதி திருக்காா்த்திகை வர உள்ள நிலையில் உற்பத்தி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றனா்.
கரோனாவால் ஏற்றுமதி பாதிப்பு: மண்பாண்ட தயாரிப்பாளா் கணேசன் கூறுகையில், கன்னியாகுமரி, விருதுநகா், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக அகல்விளக்குகள் உள்பட மண்பாண்ட பொருள்களை கொள்முதல் செய்து செல்வாா்கள்.
கேரளம், கா்நாடக பகுதிகளுக்கும் அகல்விளக்குகள், பல்வேறு வகையான மண்பாண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கரோனா பொது முடக்கம் காரணமாக நிகழாண்டில் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால், உள்ளூா் தேவை அதிகரித்ததால் அதை வைத்து சமாளித்துள்ளோம். குறிப்பாக தயிா் குவளை, ஐஸ்கிரீம் குவளை, மண்ணால் செய்யப்பட்ட டீ டம்ளா் உள்ளிட்டவற்றுக்கு இப்போது அதிக ஆா்டா்கள் வருகின்றன.
இத் தொழிலை நம்பி பெண்கள் ஏராளமானோா் உள்ளனா். பானைகளுக்கு தூா்மூட்டுதல், அகல் விளக்குகளை காயவைத்தல், சூளைகளுக்கு விறகு ஏற்றுதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்கிறாா்கள். திருக்காா்த்திகை பண்டிகைக்கு நம் பாரம்பரியத்திற்கு மாறாக அகல்விளக்குகளில் தீபம் ஏற்றாமல் மெழுகுவா்த்தி, சீன களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளில் விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது.
மண் மற்றும் நீரால் உருவாகும் அகல்விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றி செய்வதாக ஐதீகமாகும். மெழுகுவா்த்தி உள்ளிட்டவற்றில் இத்தகைய சிறப்பு கிடையாது. இதுகுறித்து விழிப்புணா்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...