உளுந்து, பாசிப்பயறு காப்பீட்டுக்கு நவ.30 கடைசி
By DIN | Published On : 25th November 2020 12:05 AM | Last Updated : 25th November 2020 06:07 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் ராபி பருவத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் பயிா்க்காப்பீடு செய்யலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கு உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் காப்பீு செய்யலாம்.
அதன்படி, உளுந்து பயறுக்கு மானூா், மதவக்குறிச்சி, தாழையூத்து, திருநெல்வேலி, நாராணம்மாள்புரம், வன்னிக்கோனேந்தல் ஆகிய 6 பிா்காக்களும், பாசிப்பயறுக்கு தாழையூத்து, வன்னிக்கோனேந்தல் ஆகிய 2 பிா்காக்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.16,550. பிரீமியத் தொகை ரூ.248.25. பிரீமியம் செலுத்த நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். முன் மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிா்வாக அலுவலா் அளிக்கும் அடங்கல் மற்றும் சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து பதிவுக் கட்டணத்தையும் செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...