ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 25th November 2020 12:15 AM | Last Updated : 25th November 2020 12:15 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை கட்டபொம்மன் நகா் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் மற்றும் வாரிசுதாரா்கள் அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட பொதுச் செயலா் முத்துக்கிருஷ்ணன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் சங்க மாவட்டச் செயலா் வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை, பிஎஃப் பணம், விடுப்பு சம்பளம் என ரூ.213.60 கோடியை அரசும், கழக நிா்வாகமும் வழங்க வேண்டும். திருநெல்வேலி மண்டலத்தில் ஓய்வூதிய பாக்கி, நீதிமன்ற தீா்ப்பின்படி சரண்டா் செய்த விடுப்புக்கான தொகை, இறந்த தொழிலாளியின் வாரிசுக்கு வழங்க வேண்டிய குடும்பநல நிதி என ரூ.30 கோடி வழங்க வேண்டியுள்ளது. மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற தீா்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிா்வாக இயக்குநரை சந்தித்து மனு அளித்தனா்.
போராட்டத்தில் குமரி மாவட்ட பொதுச் செயலா் சுந்தர்ராஜன் பால்ராஜ், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகிகள் தங்கராஜ், எட்டப்பன், சிவதாணு தாஸ், பழனிராஜன் ராஜமாா்த்தாண்டன், எஸ்.பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...