தூய்மை இந்தியா திட்டம்:நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது
By DIN | Published On : 03rd October 2020 05:30 AM | Last Updated : 03rd October 2020 05:30 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான சிறப்பு விருது காணொலிக் காட்சி முறையில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கழிவறை கட்ட இடவசதி இல்லாத குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிவறைகள் பல்வேறு திட்டங்களில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளில் ஒன்றான சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக் கழிப்பறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடா்பாக சிறந்த மாவட்டங்களுக்கு விருது வழங்குவதற்கான போட்டியில் தேசிய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதல் மாவட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் செகாவத் விருதை வழங்கிப் பாராட்டினாா். திருநெல்வேலியில் இருந்து மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அதனை ஏற்று நன்றி தெரிவித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.