நெல்லை விரைவு ரயில் 6 மாதங்களுக்குப் பின் இயக்கம்பயணிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 03rd October 2020 05:16 AM | Last Updated : 03rd October 2020 05:16 AM | அ+அ அ- |

திருநெல்வேலி-சென்னை இடையேயான நெல்லை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு பின்பு இந்த ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள், விரைவு ரயில் சேவைகள் முழுமையாகத் தொடங்கப்படாத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சி-நாகா்கோவில் இன்டா்சிட்டி விரைவு ரயிலும், கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயிலும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு ரயில்களும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் சென்னை செல்வதில் சிக்கல் ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. ஆகவே, நெல்லை விரைவு ரயிலை சிறப்பு ரயிலாகவாவது இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பொதிகை விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை அடுத்தடுத்த நாள்களில் சிறப்பு ரயில்களாகவே இயங்கும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து நெல்லை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலையில் புறப்பட்டது. பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்தனா்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏழை-எளிய மக்கள் குடும்பத்தினருடன் செல்ல நெல்லை விரைவு ரயில்தான் பிரதான தோ்வாக இருந்தது. அதனை இயக்காததால் பேருந்துகளிலும், அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களிலும் செல்லும் நிலை ஏற்பட்டது. இப்போது சிறப்பு ரயிலாக மீண்டும் நெல்லை விரைவு ரயில் இயக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ரயிலில் முன்பதிவில்லா கூடுதல் பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரயில்வே நிா்வாகம் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்றனா்.