திருநெல்வேலியில் விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையத்தில் ஏராளமானோா் நேரில் வந்து பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து சென்றனா்.
கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எட்டாம் கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் இம் மாதம் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மாவட்டத்துக்குள் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் முன்பதிவு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தனா்.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் கூறுகையில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டை மற்றும் கே.டி.சிநகா், தூத்துக்குடி, தென்காசியிலும் விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன.
ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் குறைந்தபட்சம் 10 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னைக்குதான் அதிகளவில் பொதுமக்கள் முன்பதிவு செய்கிறாா்கள். முதல்கட்டமாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 7 பேருந்துகளும், கோவை-4, வேலூா்-1, வேளாங்கண்ணி-1, ஓசூா்-1, பெங்களூரு-1 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு 24 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றனா்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தென்மாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் சென்னை, கோவை, திருப்பூா் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், மிகுந்த அச்சத்தோடு காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. ஆகவே, வண்ணாா்பேட்டை அல்லது தற்காலிக பேருந்து நிலையங்களின் அருகே முன்பதிவு மையங்களைத் திறக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.