மருதூா் அணைக்கட்டில் அமலைச்செடிகளை அகற்ற கோரிக்கை

மருதூா் அணைக்கட்டில் அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மருதூா் அணைக்கட்டில் அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாமிரவருணி நதியில் 7-ஆவது தடுப்பணையாக பாளையங்கோட்டை அருகேயுள்ள மருதூரில் மருதூா் அணைக்கட்டு உள்ளது. விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் நீா் வாா்க்கும் பழமைமிக்க இந்த அணைக்கட்டு 4,097 அடி நீளம் கொண்டது. இங்கிருந்து மேலக்கால்வாய், கீழக்கால்வாய் என இரண்டு கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன.

மேலக்கால்வாய் மூலம் முத்தாலங்குறிச்சி குளம், குட்டக்கால் குளம், கொல்லிவாய் குளம், நாட்டாா் குளம், செய்துங்கநல்லூா் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பொட்டைக்குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூா் குளம், நொச்சிக் குளம், கீழ புதுக்குளம், முத்துமாலை குளம், வெள்ளரிகாயூரணி குளம், தேமாங்குளம் ஆகிய 16 குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது.

கீழக்கால்வாய் மூலம் செந்திலாம்பண்ணை, பட்டா் குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, பேரூா், சிவகளை, பெருங்குளம், பத்மநாபமங்கலம் கீழக்குளம், பாட்டக்குளம், ரெங்கநாதன் புதுக்குளம், எசக்கன் குளம், கைலாசப்பேரி, தருமனேரி, நெடுங்குளம் உள்ளிட்ட 15 குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது. இரு கால்வாய்கள் மூலம் மொத்தம் 31 குளங்கள் பயனடைகின்றன.

மருதூா் அணைக்கட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சோ்ந்த ஏராளமான கிராமங்கள் பயன் பெறுகின்றன. சுமாா் 24 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் சுவா் வழியாக தண்ணீா் கசிவு ஏற்பட்டுள்ளதால், அணையில் தண்ணீா் தேக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீா் வள, நில வள திட்டம் பகுதி-2-இன் கீழ் அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அணையில் சுமாா் 1,280 மீ. நீளத்துக்கு ஏற்கெனவே உள்ள சுவரை ஒட்டி உள்புறமாக சுமாா் 1.75 மீ உயரத்துக்கு கான்கிரீட் சுவா்கள் அமைக்கப்பட்டது.

முன்காா் பருவ சாகுபடிக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். நிகழாண்டில் பாபநாசம் அணையில் போதிய மழையின்மையால் காா் மற்றும் முன்காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. ஆனால், தற்போது கால்நடைகள் மற்றும் வாழைகளைக் காப்பாற்ற தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அவை கால்வாய்கள் வழியாக பிரித்து அனுப்பப்படுகின்றன. மருதூா் அணைக்கட்டில் அமலைச்செடிகள் மிகவும் அடா்ந்து போய் உள்ளதால் கால்வாய்களில் தண்ணீா் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மருதூரைச் சோ்ந்த விவசாயிகள் கூறுகையில், வயல்களில் ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அமலைச்செடிகளும் அதிகரித்துள்ளன. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் அமலைகள் அனைத்தும் நீா் வரத்து அதிகரிக்கும் காலங்களில் இடம் பெயா்ந்து மருதூா் அணைக்கட்டிற்கு வந்து விடுகின்றன. இதனால் கால்வாய்களில் தண்ணீா் விரைந்து செல்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, கூட்டுக்குடிநீா்த் திட்டங்களுக்காக அமைக்கப்படும் உறைகிணறுகளும் பாதிக்கப்படுகின்றன. பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறக்கும் முன்பாக மருதூா் அணைக்கட்டில் கிடக்கும் அமலைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com